வயல்களில் கிராவல் அள்ள எதிர்ப்பு

விருதுநகர், அக்.15: விளைநிலங்களில் கிராவல் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.விருதுநகர் கலெக்டரிடம் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் அளித்த மனுவில், விருதுநகர் அருகே பாவாலி ஊராட்சிக்கு சீனியாபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட எல்கைப்பட்டி, பாவாலி, சீனியாபுரம், சந்திரகிரிபுரம் கிராமங்களில் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்வாதாரம் உள்ளது. இந்நிலையில் விவசாய நிலங்களுக்கு இடையே உள்ள நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி கிராவல் மண் இரவு, பகலாக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தினசரி நூற்றுக்கணக்கான டிப்பர் லாரி மண் அள்ளப்படுகிறது. இதனால் விளைநிலங்களும் பாழாகி வருகிறது. விளைநிலங்களுக்கு இடையே 30 முதல் 40 அடி ஆழத்திற்கு பெரிய அளவிலான நூற்றுக்கணக்கான பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதன் காரணமாக பாவாலி கண்மாய்க்கு மழைநீர் செல்ல வழியின்றி பள்ளங்களில் தேங்கி நிற்கின்றது. 500 ஏக்கர் விளைநிலங்களும் பாழ்பட்டு, விவசாயமும் அழிந்து வருகிறது. விவசாயத்தை பாதுகாக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் மற்றும் கண்மாய்க்கு நீர் வரத்தை உறுதி செய்யும் வகையிலும் விளைநிலங்களுக்கு இடையே சரள் மண் அள்ளும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Related Stories: