சோழவந்தான் அருகே கோயிலில் திருடு போன ஐம்பொன் சிலைகள் மீட்பு வாலிபர் கைது

சோழவந்தான், அக். 15: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கோயிலில் திருடு போன இரண்டு ஐம்பொன் சிலைகளை நேற்று போலீசார் மீட்டு, திருடிய வாலிபரை கைது செய்தனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த வி.கோவில்பட்டியில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான மருதோதய ஈஸ்வரமுடையார் சமேத சிவனேசவல்லி கோயில் உள்ளது. இங்கு கடந்த மாதம் 9ம் தேதி பொதுமக்கள் பங்களிப்புடன் ஒன்றே முக்கால் அடி சிவன், பார்வதி ஆகிய இரு உற்சவர் ஐம்பொன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி இரவு, கோயிலின் பின்புற சுவர் ஏறி குதித்து மர்மநபர் உள் பிரகாரத்தின் பூட்டை உடைத்து இரு ஐம்பொன் சிலைகளையும் திருடி சென்றார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிலை கடத்தல் தடுப்பு போலீசாரும் பார்வையிட்டனர். இந்நிலையில் உள்ளூர் பொதுமக்கள் கூறிய தகவலின் பேரில் இதே ஊரைச் சேர்ந்த விருமாண்டி மகன் வினித்(22) என்பவனை பிடித்து விசாரணை செய்ததில் சிலைகளை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளான். அவனை கைது செய்த போலீசார், கோயில் அருகில் பாழடைந்த மண்டபத்தில் வினித் மறைத்து வைத்திருந்த இரு ஐம்பொன் சிலைகளையும் மீட்டனர். விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட சிலைகளை பார்வையிட்ட உசிலம்பட்டி டி.எஸ்.பி.ராஜா, செக்கானூரணி இன்ஸ்பெக்டர் வனிதா திருடு போன சிலைகள் இதுதானா என கோவில் ஊழியர்களிடம் கேட்டு உறுதி செய்தனர். மேலும் இத்திருட்டு சம்பவத்தில் வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளார்களா, என்றும் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: