ராசிபுரம் அசல் நெய் என மோசடி விளம்பரம் செய்து போலி நெய் விற்பனை

ராசிபுரம்,அக்.15: ராசிபுரம் அசல் நெய் என, இணையதளத்தில் மோசடி விளம்பரம் செய்து விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல் நிலையத்தில், எஸ்ஐ சக்திவேலுவிடம், ராசிபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் மற்றும் நெய் உற்பத்தியாளர்கள் கொடுத்த புகார் மனு விபரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நெய் சர்வதேச அளவில் புகழ் பெற்றதாகும். தமிழகம் மட்டுமின்றி மும்பை, டில்லி உள்ளிட்ட வட இந்தியாவிலும், மலோசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ராசிபுரம் நெய்யிற்கு புவிசார் குறியீடு பெற உரிய சட்டபூர்வ நடவடிக்கைகளை, ராசிபுரம் நெய் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.இந்நிலையில் இணைய தளம் ஒன்றில், ராசிபுரம் Rasipuram Jagoo Fresh Ghee என்ற பெயரில் ஆன்லைனில் ராசிபுரம் அசல் நெய் என்ற பெயரில் 200 கிராம் நெய் ₹256 விலையில் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து வருகிறது. ஆனால் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில், இந்த நிறுவனமோ அல்லது இவர்களின் சார்பில் வேறு நபர்களோ நிறுவனங்களோ, ராசிபுரம் நெய்யை மொத்தமாகவோ சில்லறையாகவோ கொள்முதல் செய்வதாக தெரியவில்லை.

மேலும் இந்த நிறுவனத்திற்கு ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில், எந்த இடத்திலும் பால் பண்ணையோ கால் நடை பண்ணையோ இல்லை. பல ஆண்டுகளாக இங்குள்ள நிறுவனங்கள், உணவு பாதுகாப்பு துறை சான்று பெற்று ராசிபுரம் நெய்யை விற்பனை செய்து வருகின்றனர். போலியான பெயரில் ராசிபுரம் நெய் என வெளிநாடுகளில் விற்பனை செய்வதால், உண்மையான உற்பத்தியாளர்களின் தொழில் பாதிக்கப்படுகிறது.எனவே, இணையத்தளத்தில் ராசிபுரம் அசல் நெய் என்ற பெயரில் வியாபாரம் செய்யும் நிறுவனத்தின் மீது வழக்குபதிவு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: