உள்ளாட்சி தேர்தலையொட்டி வரும் 15ம்தேதிக்குள் போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும்

சேலம், அக்.10: உள்ளாட்சி தேர்தலையொட்டி, வரும் 15ம்தேதிக்குள் போலீஸ் அதிகாரி களை இடமாறுதல் செய்து அதற்கான பட்டியலை அனுப்ப, தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. இந்த தேர்தலில் எஸ்ஐக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாக தேர்தலை நடத்தாமல் ஆளுங்கட்சியான அதிமுக தள்ளிப்போட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலையொட்டி, போலீஸ் அதிகாரிகளுக்கு வரும் 15ம்தேதிக்குள் இடமாறுதல் வழங்கி,  அதற்கான பட்டியலை அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி, எஸ்பி, டிஐஜி, ஐஜி வரையிலான அதிகாரிகள் இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இன்ஸ்பெக்டர்களை பொருத்தவரையில் சொந்த மாவட்டமாக இருக்க கூடாது, 3 ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணியாற்றியிருக்க கூடாது என்பதாகும்.அதே நேரத்தில் இந்த தேர்தலில் எஸ்ஐக்கள் இடமாறுதலில் இருந்த தப்பியுள்ளனர். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் எஸ்ஐக்களுக்கும் மேற்கண்ட விதிமுறைகள் பொருந்தியது. எஸ்எஸ்ஐயாக இருந்து பதவி உயர்வு பெற்ற எஸ்ஐக்கள் இதனால் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். தற்போது உள்ளாட்சி தேர்தலில் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எஸ்ஐக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் அவர்களுக்கு ஓட்டு இருக்கும் பகுதியில் பணியாற்ற கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உள்ளாட்சி தேர்தலையொட்டி வரும் 15ம்தேதிக்குள் இன்ஸ்பெக்டர் முதல் ஐஜி வரையிலான அதிகாரிளுக்கு இடமாறுதல் வழங்கி, அதற்கான பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆணையம் கூறியுள்ளது. இதன்படி அதற்கான பட்டியலை தயாரித்து வருகிறோம்,’ என்றனர்.

Related Stories: