வட்டாட்சியர் விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா போலியா?

சூலூர், அக்.10:   சூலூர் அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியில்  அரசுக்கு சொந்தமான 3.4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த  இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வருவதாக முதலிபாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் கடந்த மாதம் மாவட்ட கலெக்டரிடம் புகார்  அளித்தார். இதன் பேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சூலூர்  வட்டாட்சியருக்கு மாவட்ட கலெக்டர் ராசாமணி உத்தவிட்டிருந்தார். வட்டாட்சியர் விசாரணை  நடத்தினார்.

 அந்த இடத்தில் 61 பேர் வீடுகள் கட்டியுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2017ம் ஆண்டு   எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது கோவையில் நடந்த விழாவில் தங்களுக்கு  இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதாகவும் அதன் பேரில் வீடு கட்டி  உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  அந்த பட்டாவுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராக  மக்களிடம் வட்டாட்சியர் கேட்டுக்கொண்டார். ஆனால்  தங்களது ஒரிஜினல் பட்டா அப்பகுதியை சேர்ந்தவர் வாங்கி வைத்துக் கொண்டதாக பொதுமக்கள்  கூறியுள்ளனர். இது குறித்து  கருமத்தம்பட்டி  வருவாய் ஆய்வாளர் வழியாக  குரும்பபாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் அறிக்கை வாங்கப்பட்டு மாவட்ட கலெக்டருக்கு அந்த நிலம் மந்தைப்  புறம்போக்கு என அறிக்கை  சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அந்த நில வகைப்பாடு குறித்து தெரியாமல் கொடுத்த பட்டா சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாக வருவாய் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில்: ‘‘இந்த இடம்  முன்னாள் ராணுவ வீரர் ஒருவருக்கு கடந்த 1946ம் ஆண்டு அரசால் இலவசமாக வழங்கப்பட்ட இடம். அவரது வாரிசுகள் கண்டுகொள்ளாததால் அதை அரசு புறம்போக்காக வகைபாடு செய்துள்ளது என தெரிவித்தார். பட்டா வைத்துள்ளதாக மக்கள் கூறியவரிடம் சம்பந்தப்பட்டவர்கள் நேற்று முன்தினம் சென்று தங்கள் பட்டாவை திரும்ப அளிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் அந்த நபர் வழங்கிய பட்டா நிலம் தற்போது வரை மந்தைப்  புறம்போக்காக உள்ளதால் சில சட்ட சிக்கல்கள் உள்ளதாகவும், அதை வகைபாடு  மாற்றி புதிய பட்டா வழங்க ஏற்பாடு செய்து  வருவதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Stories: