ரபேல் போர் விமானம் வாங்கியதாக கூறுவது பாஜ அரசின் கபட நாடகம்

பெருந்துறை, அக்.10: ரபேல் போர் விமானம் வாங்கியதாக கூறி மக்களிடம் பாஜ அரசு கபட நாடகம் ஆடி வருகிறது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சஞ்சய் தத் கூறினார். காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்துறையில் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், அவர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார். பின்னர், சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறியதாவது:ரபேல் போர் விமானம் வாங்கியதாக பாஜ கூறி வருவது மக்களை ஏமாற்றும் நாடகம். ரபேல் விமானத்தை இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர இரண்டு ஆண்டு ஆகும். ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் மக்களை ஏமாற்ற பாஜ அரசு இத்தகைய நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.

Advertising
Advertising

மேலும், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும். அதிமுக அரசின் பொய்யான வாக்குறுதி எடுபடாது. அதிமுக அரசு மத்தியில் ஆளும் பாஜ அரசின் ஆட்டுவித்தலுக்கு ஏற்ப தலையசைத்து வருகிறது. தமிழக நலனில் அக்கறை செலுத்தாமல் ஊழல் ஒன்றையே முதல் குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வருகிறது. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு பாஜ அரசின் காழ்ப்புணர்ச்சியே காரணம். அவர் கைதாகி இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன் என தெரியவில்லை. இவ்வாறு சஞ்சய்தத் கூறினார்.

Related Stories: