இருதய அறுவை சிகிச்சை பெற்ற கூலித்தொழிலாளி மகன் கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தார்

திருவண்ணாமலை, அக்.9: பிறவி இருதய நோய் சிகிச்சை முடிந்து திரும்பிய தொழிலாளியின் மகன், குடும்பத்துடன் கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தார். செங்கம் தாலுகா தண்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, கூலித்தொழிலாளி. இவரது மனைவி சின்னபாப்பா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் கோவிந்தராஜ்(16). இவருக்கு, பிறவியிலேயே இதயநோய் இருந்தது. அதற்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், உயர் சிகிச்சை பெற வசதியின்றி கோவிந்தராஜ் தவித்தார். இதனால் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை கடந்த மாதம் சந்தித்து, உயர் சிகிச்சைக்கு உதவி கேட்டு மனு அளித்தார்.

Advertising
Advertising

தொடர்ந்து, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை பெற தேவையான அனைத்து உதவிகளையும் கலெக்டர் செய்தார். காப்பீடு திட்டம் மற்றும் தனியார் தொண்டு நிறுவன உதவி மூலம் மருத்துவ செலவுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும், கடந்த மாதம் 18ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு, கோவிந்தராஜ் கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், இருதய அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கோவிந்தராஜ் தனது பெற்றோருடன் நேற்று முன்தினம் கலெக்டர் கந்தசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, கோவிந்தராஜிக்கு, புத்தாடைகள் மற்றும் ₹1000 வழங்கி கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: