பெல் டவுன்ஷிப்பில் நவராத்திரி விழா துர்கா உள்ளிட்ட 5 சுவாமி சிலைகள் காவிரியில் கரைப்பு

மண்ணச்சநல்லூர், அக்.9: நவராத்திரி விழாவையொட்டி திருச்சி பெல் டவுன்ஷிப்பில் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. இதில் துர்கா உள்ளிட்ட 5 சுவாமி சிலைகள் அம்மா மண்டபம் காவிரியில் கரைக்கப்பட்டது. கடந்த 33 ஆண்டுகளாக திருச்சி பெல்லில் துர்கா பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழாவில் துர்கா பூஜை பெல் டவுன்ஷிப்பில் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இது ஒரு ஆன்மிக மற்றும் கலாச்சார படைப்பாற்றல் ஊக்குவிப்பை வழங்கும் தெய்வீக நிகழ்ச்சியாகும். பன்முகப்படுத்தப்பட்ட கலாசார விழாவில் எச்ஏபிபி, ஓஎப்டி, பெல், என்ஐடி, சாஸ்த்ரா மற்றும் மதுரை, கரூர், டால்மியாபுரம், தஞ்சை, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொன்டனர்.

இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை கொண்டாடப்பட்டன. இவ்விழா பன்மொழி கலாச்சாரத்தை கொண்டு நடத்தப்படுகிறது. பெங்காலி இசை நிகழ்ச்சி, ஒடிசி நடனம், ராமகிருஷ்ணா ஷரத் சமிதியின் பக்தி நிகழ்ச்சி போன்றவை இடம்பெற்றன. முன்னதாக ஓவியப்போட்டி, நினைவு பரிசு, வெவ்வேறு படைப்பாற்றலுக்கான சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. விழாவின் முக்கியமான நிகழ்வாக நேற்று மாலை துர்கா, லட்சுமி, சரஸ்வதி, முருகன், விநாயகர் ஆகிய 5 சுவாமிகளை ஊர்வலமாக கொண்டு வந்து ரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் வைத்து வழிபாடு நடத்தினர். இதை தொடர்ந்து துர்கா சிலை உள்பட 5 சுவாமி சிலைகளையும் காவிரியில் கரைத்தனர். விழா ஏற்பாடுகளை பெல் நிர்வாக இயக்குனர் பத்மநாபன். பொது மேலாளர் நாகராஜன், பூஜை குழுவின் செயலாளர் பாலாஷ்டோலாயா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: