படகு சவாரிக்கு தயாராகிறது உக்கடம் பெரியகுளம்

கோவை, அக்.9: கோவை உக்கடம் பெரியகுளத்தில் ஸ்கேட்டிங், சைக்கிளிங் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. படகு துறை அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செல்வசிந்தாமணி குளம், உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் சீரமைக்கும் பணி நடக்கிறது. பெரியகுளத்தின் சீரமைப்பு பணிக்கு 27 கோடி ரூபாயும், உக்கடம் வாலாங்குளத்திற்கு 15 கோடி ரூபாயும் கோவை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் பெரியகுளத்தில் சீரமைப்பு பணிகள் 50 சதவீதம் முடிந்து விட்டது. குளத்தின் கிழ மேற்கு கரையில் சைக்கிளிங் மற்றும் ஸ்கேட்டிங் தளம் அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது. ஓரிரு மாதத்தில் இந்த பணி முடியும். இது தவிர 1.8 கி.மீ தூரத்திற்கு நடை பயிற்சி தளம் அமைக்கப்படவுள்ளது. நடைபயிற்சி மற்றும் சைக்கிளிங் தளத்தில் இயற்கை பூங்கா அமைக்கப்படும். சிறுவர்கள் விளையாட ‘பிளேயிங் ஜோன்’ ஏற்படுத்தப்படவுள்ளது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்படும். குளத்தின் கரை நீளம் 2,800 மீட்டர். இந்த ஏரியா முழுவதையும் சீரமைத்து பொதுமக்கள் குளம் மற்றும் குளத்தின் மையப்பகுதியில் அமைக்கபடவுள்ள மைய தீவுகளையும், அங்கே அலங்கார செடி, கொடிகளையும் காண வழிவகை செய்யப்படும். தீவு பகுதியில், பெலிக்கன், ரோசி பெலிக்கன், சாரஸ் கிரே, பெயிண்டட ஸ்டார்க் உள்ளிட்ட வெளிநாட்டு பறவையினங்கள் வசிப்பதற்கான சூழல் அமைக்கப்படவுள்ளது.

Advertising
Advertising

விரைவில் படகு துறை அமைப்பதற்கான பணிகள் துவக்கப்படவுள்ளது. முன்னதாக சேத்துமா வாய்க்காலில் இருந்து பெரியகுளத்திற்கு வரும் நீர் பாதையில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும். கழிவு நீர் அனைத்தும் சுத்திகரித்து, நல்ல நீர் மட்டுமே குளத்திற்குள் அனுமதிக்கப்படும். குளத்தில் நல்ல நீர் தேங்கும் போது அசுத்தம் இருக்காது. நீரில் ஆகாய தாமரை பரவாது. குளத்தின் மொத்த நீர் தேக்க உயரமான 19.10 அடிக்கு நீரை தேக்கி வைக்க முடியும். குளம் 372 ஏக்கர் அளவிற்கு நீர் தேக்க பரப்பு கொண்டது, இதன் மூலமாக 1,425 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது என கோவை மாநகராட்சியினர் தெரிவித்தனர். பெரியகுளத்தை தொடர்ந்து உக்கடம் வாலாங்குளம் சீரமைக்கும் பணியும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கிறது. இந்த குளம் 14.74 அடி ஆழம் கொண்டது. இதில்  10 அடி ஆழம் வரை மட்டுமே நீர் தேக்க முடியும். இந்த குளத்தை ஆழப்படுத்தி சீரமைத்து கரைகளை பலமாக்கும் பணிகள் நடக்கிறது. இந்த குளத்திலும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

 தமிழகத்தின் முன் மாதிரி குளமாக உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தை மாற்ற மாநகராட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மாநில அளவில் வேறு எங்கேயும் நகர்ப்பகுதி குளங்கள் பொலிவாக மாற்றப்படவில்லை. பெரியகுளத்தை ‘மாடலாக’ வைத்து குறிச்சி குளம் உட்பட பல்வேறு குளங்களை சீரமைக்க நகராட்சி நிர்வாகத்துறை திட்டமிட்டுள்ளது. பெரியகுளம் சீரமைப்பு பணி 50 சதவீதம் முடிந்துள்ளது. வரும் மார்ச் மாதம் முழு பணியும் முடியும். பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். படகு சவாரி திட்டமும் செயல்பாட்டிற்கு வரும் என மாநகராட்சியினர் தெரிவித்தனர்.

Related Stories: