செங்கல் தொழில் குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெ.நா.பாளையம், அக்.4:செங்கல் தொழில் குறித்து தவறான தகவல் பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி் கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் எஸ்பிபிடம் மனு அளிக்கப்பட்டது. கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தர்மராஜ், செயலாளர் கவிசரவணக்குமார், பொருளாளர் சம்பத் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சின்னராஜூ உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட எஸ்பி., சுஜித் குமார் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: ‘‘கோவை சின்ன தடாகம், 24 வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஆகிய பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் உற்பத்தி நடைபெற்று வருகின்றது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிைலயில் கடந்த சில மாதங்களாக செங்கல் உற்பத்தி தொழிலை சட்டவிரோத தொழிலாக காட்சிப்படுத்தி செய்திகள் வெளியாகின்றன.

 கடந்த 2002ம் ஆண்டு தமிழ்நாடு கனிம வளத்துறையால் வெளியிடப்பட்ட அரசாணையில் செம்மண் பட்டா இடங்களில் மண் எடுத்துக் கொள்ளவும், அதனை வெளியே கொண்டு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தடாகம் பகுதியை பொறுத்தவரையில், அனைத்து செங்கல் உற்பத்தியாளர்களும், அரசுக்கு முறையாக ஜிஎஸ்டி உள்பட அனைத்து வரிகளையும் செலுத்தி செங்கல் விற்பனை தொழிலை நடத்தி வருகின்றனர்.  கடந்த ஆண்டில் வனத் துறையின் சார்பில் பனைமரம் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. பொதுமக்கள் சார்பாக முந்திரி பொட்டு பயன்படுத்த வேண்டாம் என எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவற்றை நாங்கள்  பயன்படுத்துவதில்லை. மேலும் எங்கள் தொழிலால் யானைகளுக்கு நாங்கள் பாதிப்பு ஏற்படுத்துவது போல் கூறி வருவது சரியல்ல.

 எந்த ஒரு செங்கல் சேம்பர்களுக்கும், சுற்றுச்சுவர் என்பதோ, அல்லது வேலிகள் என்பதோ கிடையாது, யானைகள் தண்ணீர் அருந்த வசதியாக அனைத்து சேம்பர்களிலும் தண்ணீர் தொட்டி அமைத்துள்ளோம். வனத்தை ஒட்டி தற்போது எந்த மண்ணும் அள்ளப்படவில்லை, வனத் துறையின் சார்பாக வனத்திலிருந்து குறிப்பிட்ட அளவு தூரம் வரை மண் எடுக்க கூடாது என எந்த அறிவுறுத்தலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறு தெரிவிக்கப்பட்டால் அதற்கு உட்பட்டு நடக்கவும் தயாராக இருக்கின்றோம்.  அரசு தரப்பில் இருந்து அவ்வப்போது அறிவுறுத்தப்பட்ட அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம். தற்போது எங்களைப்பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டும். மேலும் தவறான தகவல் பரப்பு நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: