வேலூர் உட்பட 10 அரசு மருத்துவக்கல்லூரிகளில் பேராசிரியர்கள் இன்றி பிஎஸ்சி ரேடியோலஜி முடக்கம் மருத்துவ மாணவர்களின் கல்வி கேள்விக்குறி

வேலூர், அக்.2:பேராசிரியர்கள் இல்லாததால் பிஎஸ்சி ரேடியோலஜி பிரிவு, வேலூர் உட்பட 10 அரசு மருத்துவக்கல்லூரிகள் முடங்கியுள்ளது. எனவே மருத்துவ மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 10 அரசு மருத்துவக்கல்லூரிகளில் பிஎஸ்சி ரேடியோலஜி இமேஜிங் டெக்னாலஜி பாடப்பிரிவு உள்ளது. இதில் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது. மொத்தம் 3 ஆண்டுகள் கல்வியும், 4வது ஆண்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இதில் பிஎஸ்சி ரேடியோலஜி இமேஜிங் டெக்னாலஜி பாடப்பிரிவில் பயின்றவர்களையே பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. அதேசமயம் தமிழகத்தில் மேற்கண்ட பாடப்பிரிவில் 10 மருத்துவக்கல்லூரிகளிலும், மருத்துவ மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க பேராசிரியர்களே நியமிக்கப்படாமல் இப்பிரிவு முடங்கியுள்ளதாக மருத்துவ மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதில் அனாடமி, பிசியோலஜி ஆகிய 2 பாடப்பிரிவுகளுக்கு பொது மருத்துவ மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. மேலும் மீதமுள்ள பாடங்களுக்கு பேராசிரியர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வேலூர் உட்பட 10 மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.இதில் ஒரு பேட்ஜ் மாணவர்கள், பேராசிரியர்கள் இன்றி படிப்பை முடித்து வெளியே வந்துவிட்டனர். எனவே இனியாவது தமிழகத்தில் யூஜிசி முறைப்படி காலியாக உள்ள பிஎஸ்சி ரேடியோலஜி பிரிவில் பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: