அருங்காட்சியகம் பஸ் கோவை வந்தது

கோவை, அக். 1:  சென்னை அரசு மியூசியத்தில் உள்ள பாரம்பரிய சின்னங்களின் மாதிரிகளை கொண்ட மியூசியம் பஸ் நேற்று கோவை அரசு அருங்காட்சியகத்திற்கு வந்தது. அருங்காட்சியகங்கள் துறை சார்பில் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள பாரம்பரியமான தொல்லியல், மானிடவியல், விலங்கியல், தாவரவியல், புவியியல், ஓவியங்கள் மற்றும் நாணயங்கள் ஆகியவற்றின் மாதிரிகளை கொண்டு அருங்காட்சியக பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம் குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும், சென்னையில் உள்ள அருங்காட்சியகத்திற்கு செல்ல முடியாதவர்கள், அதனை குறித்து தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த  நடமாடும் அருங்காட்சியக பேருந்து நேற்று கோவை வந்தது. சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் அருங்காட்சியக பேருந்தை பார்வையிட்டனர்.

இதில், சங்க கால நாணயம், ஐம்பொன் சிலைகள் குறித்த தகவல்கள், விலங்குகள், கனிமவளம் தொடர்பான தகவல்கள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள் இருந்தது. சென்னை அருங்காட்சியகத்தின் சிறப்பு அம்சங்கள் அனைத்தும் இப்பேருந்தில் இருக்கிறது. இந்த பேருந்து வரும் 12ம் தேதி வரை கோவையில் இருக்கும் எனவும், மாலை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கோவை வ.உ.சி பூங்கா எதிரேயுள்ள அரசு அருங்காட்சியகத்தின் முன்பு நிறுத்தப்படும் எனவும்  கோவை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் தெரிவித்துள்ளார். அருங்காட்சிய பேருந்தை இலவசமாக பார்வையிடலாம். இதை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மியூசியம் பஸ்சை பார்வையிட தேவைப்படும் பள்ளி, கல்லூரிகள் கோவை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியரை 86809-58340, 80723-51388 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: