உத்திரமேரூர் அருகே புதிய கல்குவாரி கலெக்டரை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரதம்

உத்திரமேரூர், அக். 1: உத்திரமேரூர் அருகே பழவேலி கிராமத்தில் புதிதாக அமையுவுள்ள கல்குவாரிக்கு தடை விதிக்க கோரி, கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்திரமேரூர் அடுத்த பழவேலி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பல்வேறு தனியார் கல்குவாரிகள் இயங்குகின்றன. இங்கு பல்வேறு கல்அறவை தொழிச்சாலைகள் செயல்படுகின்றன. இந்த கல்குவாரிகளில் பூமியில் இருந்து கற்கள் பெயர்த்தெடுக்க, சக்திவாய்ந்த வெடி பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள வீடுகளிலும் அதிர்வு ஏற்பட்டு சுவரில் விரிசல் உருவாகிறது. இங்குள்ள கல்அறவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், கிராம மக்களுக்கு சுவாச கோளாறு உள்பட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். மேலும், விவசாயநிலங்களில் பயிரிடும் பயிர்களில், இந்த புகை படிவதால் பயிர்கள் வளராமல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு கனிமவளங்களை கொள்ளையடிப்பது மட்டுமின்றி இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர். மேலும், கல்குவாரிகளில்  இருந்து செல்லும் லாரிகளால், கிராம சாலைகள்பழுதாகி, போக்குவரத்துக்கு  லாயக்கற்ற நிலையில் மாறுவதுடன், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு  சம்பவம் நடக்கிறது.

இந்த வேளையில், பழவேலி கிராமத்தில் புதிதாக கல்குவாரி தொடங்க உள்ளதாக கடந்த 13ம் தேதி, திடீரென சாலை அமைத்து தனியார் கல்குவாரிக்கு பூமி பூஜை நடந்தது. இதையறிந்த கிராம மக்கள், அங்கு சென்று, பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், புதிதாக அமைய உள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த சாலவாக்கம் போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைய செய்தனர். பின்னர் இங்கு கல்குவாரி அமைக்க, மாவட்ட நிர்வாகம் கொடுத்த அனுமதியை ரத்து செய்யக் கோரி கிராம மக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர். ஆனால், இதுவரை இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், புதிய கல்குவாரி அமைக்க தடை விதிக்க கோரி, பழவேலி கிராம மக்கள், நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரமுள்ள கல்குவாரிகளில் வெடி வைத்தாலே, எங்கள் கிராமத்தில் உள்ள வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்படுகிறது. இந்த வேளையில், குடியிருப்பு பகுதியிலில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் புதிய கல்குவாரி துவங்க உள்ளனர். இதனால் கிராமமே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள குவாரிகளால், சாலை வசதி, குடிநீர் பற்றாக்குறை, சுவாச கோளாறு உள்பட பல்வேறு பிரச்னைகளில் தவிக்கிறோம். தற்போது, புதிதாக அமைய உள்ள இந்த கல்குவாரி மலையடிவாரத்தில் உள்ளதால், மலை அழிக்கப்பட்டு கிராமமே அழிந்துவிடும். இந்த கல்குவாரிக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்யக் கோரி கடந்த 14ம் தேதி கலெக்டரிடம் புகார் மனு அளித்தோம். மனு அளித்து 15 நாட்கள் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அப்போதும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால், எங்களது போராட்டத்தை பெரிய அளவில் நடத்துவோம் என்றனர்.

Related Stories: