காங்கிரஸ் வலியுறுத்தல் தங்களது உரிமைக்காக போராடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்

தஞ்சை, அக். 1: தங்களது உரிமைக்காக போராடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று தஞ்சையில் நடந்த தமிழ்நா அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் சிஐடியூ தமிழ் மாநில தலைவர் சவுந்தர்ராஜன் பேசினார்.தஞ்சையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 13வது மாநில மாநாடு நேற்று நடந்தது. மாநில தலைவர் செல்வம் தலைமை வகித்தார். வரவேற்புக்குழு தலைவர் தமிழ்மணி வரவேற்றார். பொது செயலாளர் அன்பரசு தீர்மானங்களை விளக்கி பேசினார். சிஐடியூ தமிழ் மாநில தலைவர் சவுந்தர்ராஜன் பேசியதாவது: ஓய்வூதியத்தை அரசு பெரும் சுமையாக கருதுகிறது. இதனால் ஓய்வூதியர்கள் மீது அரசு கடும் தாக்குதலை நடத்துகிறது. சம்பளத்தை, ஊதியத்தின் உண்மை மதிப்பை குறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. புதிய வேலை நியமனம் என்பதே இல்லை. இருக்கும் ஊழியர்களை கொண்டே எல்லா வேலைகளையும் செய்ய நினைக்கின்றனர். இல்லையென்றால் அரசு வேலைக்கு அவுட் சோர்சிங் முறையை பயன்படுத்துகின்றனர். பாதுகாப்பு துறையை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முயற்சிக்கிறது. பாதுகாப்புத்துறை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் நம் நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

போராடி பெற்ற உரிமைகளை அரசு மறுக்கிறது. இதை எந்த நீதிமன்றமும் கண்டு கொள்ளவில்லை. சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படுகிறதா. உழைப்பு சுரண்டலை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் போராட வேண்டும். கார் தயாரிப்பு நிறுவனங்கள் நஷ்டமடைந்தால் பல லட்சம் கோடி ரூபாயை நிவாரணமாக அரசு வழங்குகிறது. ஆனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு முன்வருவதில்லை. சுங்கச்சாவடிகளில் மக்களிடமிருந்து ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்படுகிறது. விவசாயக்கடன் ரத்து செய்ய மத்திய அரசு முன்வருவதில்லை. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுப்பதில்லை. விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்தும் தலைவர்கள் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நலத்திட்டங்கள், உரிமைகளை மக்களுக்கு வழங்க அரசுகள் தயாராக இல்லை. எனவே மக்கள் தங்களது உரிமைக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

Related Stories: