காரைக்குடி, செப்.26: காரைக்குடி கழனிவாசல் என்ஜிஓ காலனியில் சாலைகள் போடப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் தார் சாலையே இல்லாமல் மிகவும் மோசமாக உள்ளது. என்ஜிஓ காலனி மற்றும் புதிய வீட்டு வசதி வாரியம், முன்னாள் படைவீரர் குடியிருப்பு, பவர் கிரிட் மற்றும் திருச்சி-ராமேஸ்வரம் புறவழிச்சாலையை இணைக்கும் சாலை இந்த என்ஜிஓ காலனி சாலை தான் காலையில் இருந்து மாலை வரை பள்ளி பேருந்துகளும், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் சென்று வரும் சாலையாக உள்ளது. கழனிவாசல் என்ஜிஓ காலனி மயானத்திற்கும் இச்சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். இச்சாலை போடப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆவதாக அப்பகுதி ஏரியா வாசிகள் கூறினர். நேற்று முன்தினம் பெய்த கன மழையில் சாலை எது?, சாலையில் உள்ள பள்ளம் எது என தெரியாத அளவிற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.