காளையார்கோவிலில் நாளை உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி

சிவகங்கை, மே 12: சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்ட மாணவ மாணவிகளுக்கு காளையார்கோவிலிலுள்ள புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில் நாளை (மே 13) பள்ளிக் கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘கல்லூரிக்கனவு’ என்ற தலைப்பில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் உயர்கல்விக்கு வழிகாட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள 68 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 1,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் உயர்கல்வி நிறுவனங்கள், உயர்கல்வி படிப்புகள் மற்றும் வங்கிக் கடன்கள் சார்பான அரங்குகள் அமைக்கவும், ஆலோசனை வழங்கப்படவும் உள்ளது. கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ புத்தகமும் வழங்கப்பட உள்ளது. பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், கலைப்படிப்புகள், அறிவியல் படிப்புகள் மற்றும் ஊடகவியல் சார்ந்த படிப்புகள் என பல்வேறு படிப்புகளில் உள்ள உட்பிரிவுகளும், அவற்றிற்கான வேலை வாய்ப்புகள் குறித்து பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் மூலம் விளக்கப்பட உள்ளது. இதில் மாணவ, மாணவிகள் முழுமையாக கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post காளையார்கோவிலில் நாளை உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: