கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியாளர்கள் 71 பேருக்கு பதவி உயர்வு ஆணை

பரமத்திவேலூர், செப்.25:  மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 71 பேருக்கு, பதவி உயர்வு ஆணையை அமைச்சர் தங்கமணி வழங்கினார். மோகனூரில் இயங்கி வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றும் 8 பணியாளர்கள் உட்பட 71 பேருக்கு, பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா ஆலை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சர்க்கரை ஆலையின் நிர்வாகக்குழு தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பதவி உயர்வு ஆணையை வழங்கி பேசுகையில், ‘தமிழக முதல்வர் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால், விவசாயிகளின் நலன் உயர வேண்டும் என மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். ஆலையில் உள்ள இணை மின் உற்பத்தியை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’ என்றார்.

விழாவில் நாமக்கல் பாஸ்கர் எம்எல்ஏ, மோகனூர் ஒன்றிய அதிமுக செயலாளர் கருமண்ணன், மோகனூர் நகர செயலாளர் தங்கமுத்து, மாவட்ட மாணவரணி செயலாளர் சந்திரமோகன், ஆலையின் நிர்வாகக்குழு துணைத்தலைவர் வெற்றிவேல், அண்ணா தொழிற்சங்க சர்க்கரை பிரிவு மாநில தலைவர் பாஸ்கர் மற்றும் கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர். சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சரவணமூர்த்தி வரவேற்றார். தொழிலாளர் நல அலுவலர் மகேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories: