கன்னியாகுமரியில் களை கட்ட தொடங்கிய நவராத்திரி சீசன் வடமாநில சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கன்னியாகுமரி, செப்.24: நவராத்திரி பண்டிகை வரும் 29ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஆயுதபூஜை, விஜயதசமி என பண்டிகைகள் வருகின்றன. இதனிடையே காந்தி ஜெயந்தி விடுமுறையும் வருகிறது. வடமாநிலங்களில் நவராத்திரி பண்டிகை இப்போதே களை கட்ட தொடங்கிவிட்டது. பல மாநிலங்களில் பண்டிகை கால விடுமுறை இப்போதே தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வடமாநில மக்கள் தென்மாநில சுற்றுலாத்தலங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதில் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தற்போது வடமாநில சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்வதற்காக அதிகாலையிலேயே பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக கியூஷெட்டில் காத்து இருக்கின்றனர். படகு சேவை தொடங்கியதும் முண்டியடித்து டிக்கெட் பெற்று நீண்ட வரிசையில் நின்று படகில் செல்கின்றனர். வடமாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதை தொடர்ந்து கன்னியாகுமரியில் நவராத்திரி பண்டிகை சீசன் களை கட்ட தொடங்கி உள்ளது.

இதுபோல் மாலையில் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்காகவும் ஏராளமானோர் வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் ஹோட்டல்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ெதாடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் லாட்ஜ் அறைகள் புக்கிங் விறுவிறுப்பாக நடக்கிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை எதிர்பார்த்து அதிகளவிலான வியாபாரிகள் வர தொடங்கி உள்ளனர். மேலும் நவராத்திரி விழாவில் முக்கிய பங்கு வகிக்கும் சரஸ்வதி, லட்சுமி, துர்கா ஆகிய முப்பெரும் தேவியர் சிலைகள் மற்றும் பொம்மைகள், தானியங்கள், தின்பண்டங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மக்களும் கன்னியாகுமரியில் அதிகளவில் குவிகின்றனர்.

Related Stories: