குமரி மலையோர பகுதிகளில் கனமழை இறச்சகுளத்தில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

நாகர்கோவில், செப்.24: குமரி மாவட்ட மலையோர பகுதிகளில் நேற்று திடீரென்று கனமழை பெய்த நிலையில் இறச்சகுளம் பகுதியில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த சாரல் மழை ஓய்ந்து மீண்டும் வெயில்கொளுத்தி வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மலையோர பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் மலையோர பகுதிகளில் இருந்து காட்டாற்று வெள்ளம் பாய தொடங்கியது. திற்பரப்பு அருவியிலும் பெருமளவு தண்ணீர் கொட்டியது. இதில் நேற்று காலை வரை அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 76.4 மி.மீ மழை பதிவாகி இருந்தது. சுருளோடு 48.4, பாலமோர் 29.6, கன்னிமார் 37.2, பூதப்பாண்டி 31.6, முக்கடல் அணை 62.2, அடையாமடை 13, பேச்சிப்பாறை, சிற்றார்-1ல் 4 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. நேற்றும் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை காணப்பட்டது.

முக்கடல் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இறச்சகுளம் பகுதியில் கால்வாய்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கன்னிப்பூவில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 50 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 24.20 அடியாக இருந்தது. அணைக்கு 310 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 122 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 64.70 அடியாக இருந்தது. அணைக்கு 980 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 12.89 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு 172 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 12.99 அடியாக நீர்மட்டம் இருந்தது. பொய்கையில் 7.10 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 45.77 அடியும் நீர்மட்டம் உள்ளது. முக்கடல் அணை நீர்மட்டம் 10.40 அடியாக உயர்ந்துள்ளது.

Related Stories: