தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு 200 நாட்கள் சிறை

கோவை, செப்.20:கோவையில் தொடர் குற்ற  சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு 200 நாட்கள் சிறை தண்டனை விதித்து கோவை சட்டம்-ஒழுங்கு துணை  ஆணையர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். ரத்தினபுரி பொங்கி அம்மாள் வீதியை சேர்ந்தவர் கவுதம்(27). இவர்  மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், ஜாமீனில் வெளியே இருந்த இவர்  மீண்டும்  பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதால் ரத்தினபுரி போலீசார் கவுதமை பிடித்து  சட்டம்- ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் முன்பு ஆஜர்படுத்தினர்.

அப்போது துணை ஆணையர் அந்த  வாலிபரிடம் இனி மேல் எந்த தவறும் செய்ய மாட்டேன் என்று உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்கி  விட்டு அனுப்பி  வைத்தார். இந்நிலையில் அடி, தடி வழக்கில் ரத்தினபுரி போலீசார் நேற்று அவரை  மீண்டும் கைது  செய்து துணை  ஆணையர்  பாலாஜி சரவணன் முன்பு ஆஜர்படுத்தினர். நிர்வாக நடுவர் அந்தஸ்தில் உள்ள துணை  ஆணையர் பாலாஜி சரவணன், கவுதம்  தொடர்ந்து  குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததால் அவருக்கு 200 நாட்கள் சிறை தண்டனை வழங்கி  உத்தரவிட்டார்.

Related Stories: