ஜம்பை பேரூராட்சியில் சுகாதார பணிகள் தீவிரம்

பவானி, செப்.17: ஜம்பை பேரூராட்சி பகுதியில் தீவிர கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழைய டயரில் தேங்கிய நீரில் இருந்த கொசு புழுக்கள் நேற்று அழிக்கப்பட்டன.ஜம்பை பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில் குமரன் மேற்பார்வையில், 4வது வார்டு, சின்னியம்பாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்குள்ள ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த பழைய டயரில் தேங்கிய தண்ணீரில் ஏடிஎஸ் கொசு புழுக்கள் வளர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுகாதார மேற்பார்வையாளர் பழனிச்சாமி, இளநிலை உதவியாளர் செல்வி மற்றும் துப்புரவு பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொசு புழுக்களை அழித்ததோடு டயரை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகள், சுற்றுப்புற பகுதிகளில் திறந்த வெளியில் கிடக்கும் பழைய டயர், தேங்காய் தொட்டி, பிளாஸ்டிக் பொருட்களில் மழைநீர் தேங்காத வகையில் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கொசுக்களை ஒழிக்கும் வகையில் மூன்று இயந்திரங்களைக் கொண்டு பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் புகை மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: