திருவட்டார் காவல் நிலையத்தில் அதிமுகவினர் அத்துமீறல்

குலசேகரம், செப். 17:  குமரி மாவட்ட காவல் நிலையங்களில் தற்போது ஆளும் கட்சியினர் எல்லை மீறுவது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் திருவட்டார் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது , அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். இதில் ேபாலீசாருக்கும் வாகனங்களில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த வழியாக அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவரின் கார் வந்தது. அந்த காரை போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்தனர். அப்போது ஆவணங்களை சரிபார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன ஓட்டிகள், அந்த காரையும் சோதனையிடுங்கள் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தையும் நிறுத்தி ஆவணங்களை கொண்டு வரும்படி கூறினர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பிரமுகர் உடனடியாக காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான இன்ஸ்பெக்டரை செல்ேபானில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் பணியில் இருந்த போலீசாரிடம் அந்த வாகனத்தை மட்டும் விட்டுவிடுங்கள் என கூறினார்.

ஆனால் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் இதற்கெல்லாமா நீங்கள் சிபாரிசு செய்வீர்கள் என இன்ஸ்பெக்டரிடம் கேட்டார். இதனால் போனிலேயே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வாகன சோதனையை நிறுத்திவிட்டு அங்கிருந்து திரும்பி சென்றனர். இதுசம்பந்தமாக இருவரும் உயர் அதிகாரிகளிடம் ஒருவர் மீது ஒருவர் என புகார் அளித்தனர். இந்த சம்பவம் திருவட்டாரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சாமியார்மடத்தில் டாக்சி ஓட்டி வரும் திருவட்டாரை அடுத்த கண்ணனூர் பகுதியை சேர்ந்த ஜஸ்டஸ் (55) தனது டாக்சியில் கண்ணனூர் பாஞ்சிவிளை வழியாக வந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக வெள்ளிகோடு டென்னிஸ், குழிவெட்டான்குழி ஆல்பர்ட் மற்றும் கண்டால் தெரியும் ஒருவர் என 3 பேர் காரை வழிமறித்து அவரை அடித்து உதைத்துள்ளனர். காயமடைந்த ஜஸ்டஸ் குலசேகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அதிமுகவினர் சிலர் திருவட்டார் காவல் நிலையத்துக்கு சென்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைது செய்தவரை மீட்டு சென்றனர். இவ்வாறு இப்பகுதியில் அதிமுகவினர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: