கூட்டுமங்கலத்தில் ஆசிரியர்கள் இடமாற்றத்தை எதிர்த்து பள்ளி முற்றுகை பெற்றோர் போராட்டம்

குளச்சல், செப்.17:  குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள கூட்டுமங்கலம் அரசு நடுநிலை பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வியின் தரம் குறைந்து வருகிறது. எனவே இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கு பணியாற்றிய 5 ஆசிரியர்களில் 2 ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்தும், நேற்று அவர்கள் நியமிக்கப்பட்ட பள்ளியில் பணியில் சேர வேண்டும் எனவும் கல்வித்துறை உத்தரவிட்டது. இதை அறிந்த பெற்றோர் மற்றும் கிராம கல்விக்குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், பெற்றோர் ஆசிரியர் சங்க துணை தலைவர் மாதவன்பிள்ளை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிறிஸ்டின் ஸ்டெல்லா ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் பள்ளி முன் திரண்டனர்.

2 ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். குளச்சல் வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆசிரியர்களை இடமாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. என்றாலும் இந்த பள்ளியில் வேறு ஆசிரியர்கள் பணியில் சேரும் வரை இந்த ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு செல்ல மாட்டார்கள் என அவர் உறுதி அளித்தார். இதையடுத்து பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories: