குறைதீர்க்கும் கூட்டம் நடத்தாததால் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்

உசிலம்பட்டி, செப்.11: உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறையை வழி மறித்து விவசாயிகள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 6 மாதங்களாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெறாததைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் ரத்னவேல், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது விவசாயிகள் கூறும்போது, இப்பகுதி பொதுமக்கள் 99 சதவீதம் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இது சம்மந்தமான குறைகள் ஏராளமாக உள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மழையில்லாமல் விவசாயிகள் பெருமளவில் நஷ்டமடைந்து விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

மாதந்தோறும் நடைபெறுகின்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின் வாயிலாவது விவசாயிகள் தங்களது குறைகளை கூறி வந்தனர். அதுவும் கடந்த 6 மாதமாக நடைபெறாமல் அலுவலக பணி என அதிகாரிகள் கூறுவது வருத்தம் அளிக்கிறது.எனவே 58 கால்வாயின் மூலம் தண்ணீருக்காக ஏங்கும் விவசாயிகளும், பயிர் கருகி இன்சூரன்ஸ் இல்லாத விவசாயிகளும், பயிர்காப்பீடு பெற முடியாத விவசாயிகள் பெரும்பாலும் தங்களது குறைகளை சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் இந்த கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும். மேலும் விவசாயிகள் அனைவருக்கும் பாகுபாடின்றி போன் மூலம் கூட்டம் நடைபெறும் தேதி, கிழமை, தகவல் தெரிவிக்கவேண்டும்.மேலும் இந்த கூட்டத்தை வெறுமனே பெயரளவிற்கு நடத்தாமல் விவசாயிகளுக்கு பயன்பெறும் விதமாக அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு நடத்த வேண்டும் என்றனர்.அப்போது ஆர்.டி.ஓ, இனிமேல் மாதந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் கண்டிப்பாக நடக்கும். இந்த மாதத்திற்கான கூட்டம் எப்போது என்று தாசில்தார் வந்தபின்பு கேட்டு அனைத்து விவசாயிகளுக்கும் தகவல் கொடுக்கிறோம் என்று தெரிவித்தார்.

Related Stories: