சுசீந்திரம் அருகே தோப்பில் இறந்து கிடந்த வாலிபரின் நண்பர்களிடம் விசாரணை

சுசீந்திரம், செப்.11 : சுசீந்திரம் அருகே தோப்பில் இறந்து கிடந்த வாலிபரின், நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நேவிஸ் விஜில் (38). இவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி, குடும்ப பிரச்னை காரணமாக மனைவி விவாகரத்து பெற்று சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி சென்னையில் இருந்து ஊருக்கு வந்த, நேவிஸ் விஜில்,  நண்பர்களை சந்தித்து விட்டு வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. மீண்டும் சென்னைக்கு சென்று இருக்கலாம் என உறவினர்கள் நினைத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை, நாகர்கோவில் அருகே உள்ள குஞ்சன்விளை தென்னந்தோப்பில் நேவிஸ் விஜில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். நேவிஸ் விஜில், உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் சம்பவம் நடந்த பகுதி  சுசீந்திரம் காவல் நிலையம் என கூறப்பட்டது. பின்னர் கோட்டார் காவல் நிலையத்துக்கு மாற்றப்படும் என்றனர். கடைசியில் சுசீந்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய  எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில் நேவிஸ் விஜில், அக்கா கணவர் லாரன்ஸ் அளித்த புகாரின் படி சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மனைவி விவாகரத்து பெற்று சென்றதால் மனம் உடைந்து அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தான், நேவிஸ் விஜில் எப்படி இறந்தார் என்பது உறுதியாக தெரிய வரும் என போலீசார் கூறி உள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நேவிஸ் விஜில் செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். யார், யார் அவருடன் செல்போனில் பேசினார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. நண்பர்களிடம் ஏதாவது கூறினாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.  சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: