அடக்கம் செய்ய வசதியில்லாமல் கணவர் உடலை விட்டு சென்ற மூதாட்டி

மதுரை, செப். 10: மதுரை செல்லூர் பாக்கியநாதபுரத்தைச் சேரந்தவர் ராஜேந்திரன்(75). இவரது மனைவி மீனாபாட்டி(69). இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவி இருவரும் தெருக்கள் மற்றும் குப்பைகளில் கிடக்கும் பழைய பொருட்களை சேகரித்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தனர். கடந்த மாதம் 20ம் தேதி, உடல் நலம் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலனின்றி இறந்துவிட்டார்.

கணவனின் உடலை, அடக்கம் வசதி இல்லாததாலும், இலவசமாக செய்வதற்கான வழிமுறைகள் தெரியாததாலும் விரக்தியடைந்த மீனா கணவனின் உடலை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்றுவிட்டார். மேலும் மீனா பாட்டியை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் செல்லூர் பாக்கியநாதபுரத்தில் இருந்த மீனா பாட்டியை போலீசார் கண்டுபிடித்து மருத்துவமனைக்கு கூட்டி வந்தனர். மீனா பாட்டியிடம், அவரது கணவர் ராஜேந்திரனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. நேதாஜி ட்ரஸ்ட் உதவியுடன், அவரது உடல், ஆம்புலன்சில் தத்னேரி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு நடந்தது. காது கேட்காமல், வாயும் பேச முடியாமல், கணவனையும் இழந்து தவிக்கும் மீனா பாட்டியை, அழகர்கோயில் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: