காந்திபுரம் மேம்பாலத்தில் முதன்மை செயலாளர் ஆய்வு

கோவை, செப்.10:கோவை காந்திபுரத்தில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணியை பொதுப்பணித்துறை முதன்மை செயலர் நேற்று ஆய்வு செய்தார். ஒரு மாதத்திற்குள் இந்த பணியை முடித்து மக்கள்  பயன்பாட்டிற்கு பாலத்தை திறந்துவிட வேண்டும் என அவர் உத்தரவிட்டார். கோவையில் 2 ஆண்டிற்கு முன் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 2 கி.மீ தூரத்திற்கு பாலம் கட்டப்பட்டது. தற்போது 100 அடி ரோட்டில் இருந்து ஆவாரம்பாளையம் ரோடு சிக்னல் வரை 2வது அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு  பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த கட்டுமான பணியை தமிழக நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் நேற்று ஆய்வு செய்தார். மேம்பாலம் கட்டும் பணி ஆவாரம்பாளையம் ரோடு சிக்னல் முன் தற்போது நடந்து வருகிறது. இந்த பாலம் பணி 2 மாதத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என ஆய்வின் போது முதன்மை செயலாளர் உத்தரவிட்டார். 100 அடி ரோட்டில் பாலம் துவங்கும் இடம் மிக உயரமாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இந்த பாலத்தின் மீது வாகனங்களை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.   

இதேபோல் உக்கடத்தில் 215 கோடி ரூபாய் செலவில் 1.9 கி.மீ தூரம் பாலம் கட்டும் பணி நடக்கிறது. இந்த பணியை செயலாளர் பார்வையிட்டார். வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுவதை பார்த்த செயலாளர் ஒரு ஆண்டிற்குள் பணியை முடிக்கவேண்டும். வாகனங்கள் சென்று வர போதுமான இடவசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என உத்தரவிட்டார். தற்போது மேம்பால பணி 50 சதவீதம் முடிந்துள்ளது. கோவை சுங்கம் முதல் பங்குசந்தை வளாகம் வரை 3.9 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் பாலம் கட்டும் பணியையும் முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார். இந்த பாலம் பணி வேகமாக நடக்கிறது. பாலம் பணி நடக்கும் இடத்தில் தேவையற்ற கட்டுமான பொருட்களை அகற்றவேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆவாரம்பாளையம் ரோடு பாலம் பணியையும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், கோட்ட பொறியாளர் சிற்றரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: