திருமங்கலத்தில் அம்மாபட்டி கண்மாயில் ஷட்டர்கள் திருட்டு

திருமங்கலம், ஆக.22: திருமங்கலம் தாலுகாவில் விரைவில் நிரம்பும் அம்மாபட்டி கண்மாய் மடையிலுள்ள ஷட்டர்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலம் அருகேயுள்ள அம்மாபட்டி கிராமத்தில் பெரியகண்மாய் உள்ளது. அம்மாபட்டி மற்றும் வலையங்குளம் கிராமங்களைச் சேர்ந்த 200 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் இந்த கண்மாயை நம்பியுள்ளன. பெரியபொக்கம்பட்டி, புதுப்பட்டி, காளப்பன்படடி, அழகுரெட்டிபட்டி, தங்களாசேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் அம்மாபட்டியில் மழைக்காலங்களில் பொழியும் மழைநீர் இந்த கண்மாய்க்குள் வந்து சேரும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் திருமங்கலம் தாலுகாவில் முதலில் நிரம்பிவழியும் கண்மாயாக அம்மாபட்டி கண்மாய் பெயர் எடுத்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரத்து நீர் அதிகரிக்கவே கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு பலத்த சேதத்தை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து அம்மாபட்டி கண்மாய் மழைக்காலங்களில் நிரம்பும் தருவாயில் இருக்கும் போது மடைவழியாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது.

Advertising
Advertising

இந்த நிலையில் தற்போது அம்மாபட்டி கண்மாயில் உள்ள பெரியமடையில் தண்ணீரினை வெளியேற்றும் ஷட்டர்களை மர்மநபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர். இதனால் கண்மாயில் தண்ணீரினை தேக்கி வைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் பிடிஓ உதயகுமார், சிந்துபட்டி போலீசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்மாய் ஷட்டரை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடிவருகின்றனர். இதுகுறித்து பிடிஓ உதயகுமாரிடம் கேட்ட போது,`` அம்மாபட்டி பெரியகண்மாயில் மடை ஷட்டரை யாரோ திருடி சென்றுவிட்டதாக தகவல் வந்தது. கண்மாயை ஆய்வு செய்து இது குறித்து போலீசில் புகார் செய்தோம். மேலும் இது மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். விரைவில் புதிய ஷட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை துவங்கி இரவு வரையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அம்மாபட்டி கண்மாயில் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. பெரியமடையில் ஷட்டர் இல்லாததால் தண்ணீர் வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது விவசாயிகளிடம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. எனவே, அதிகாரிகள் விரைவில் புதிய ஷட்டர்களை அமைத்து கண்மாய் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: