கொல்லங்கோடு அருகே பெண்ணிடம் செயின் பறித்த அண்ணன், தம்பி கைது

நித்திரவிளை, ஆக.22:  கொல்லங்ேகாடு அருகே பைக்கில் சுற்றி செயின் பறிப்பில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த அண்ணன், தம்பியை  போலீசார் கைது செய்தனர்.கொல்லங்ேகாடு அருகே காக்கவிளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7ம் தேதி மார்க்கெட் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அவர் காக்கவிளை ஆர்சி சர்ச் அருகே சென்று கொண்டிருந்தபோது  பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை பறித்துவிட்டு தப்பி சென்றனர். பைக் ஓட்டி சென்ற நபர் ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் அவரது முகம் தெளிவாக தெரிந்தது என செயினை பறிகொடுத்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொ டர்ந்து சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து பொழியூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தெளிவான வீடியோ காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தது. பைக் எண், வாலிபர்களின் உருவங்கள் உறுதி செய்யப்பட்டது.

அதனை வைத்து நடத்திய விசாரணையில் அவர்கள் பயன் படுத்திய பைக் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அண்மையில் தனது வீட்டிற்கு வந்த உறவினர்கள்தான் அவர்கள் எனவும், சம்பவத்தன்று அவர்கள் இருவரும் தனது பைக்கை எடுத்து ஓட்டி சென்றனர் எனவும் கூறியுள்ளார்.பின்னர் போலீசார் அவரையும் அழைத்துக் கொண்டு திருச்சிக்கு  சென்றனர். உறவினரின் மொபைல் போனில் அந்த வாலிபர்களை  தொடர்பு கொண்டு வரவழைத்து அவர்களை கைது செய்தனர்.விசாரணையில் அவர்கள் இருவரும் திருச்சி, செந்தநீர்புரம், வள்ளுவர் தெருவை சேர்ந்த ஜாண்பால்(27), பிராங்கிளின் குமார்(32) என்பதும், இருவரும் அண்ணன், தம்பிகள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் தமிழகத்தில் பல பகுதிகளிலும் செயின் பறிப்புகளில் ஈடுபட்டவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட செயினும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: