காரைக்கால் தனியார் துறைமுகத்தில் மலேசியா மணல் விற்பனை துவக்கம்

காரைக்கால், ஆக.22: காரைக்கால் தனியார் துறைமுகத்தில், மலேசியா மணல், நேற்று முதல் விற்பனை தொடங்கியது.காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி, உரம், ஜிப்சம், சீனி, உள்ளிட்ட இறக்குமதியைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன், மலேசியாவிலிருந்து சுமார் 54 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட இந்த மணலை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய சோதனை செய்து அறிக்கையை சமர்பித்தனர். தொடர்ந்து, மணல் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. தனியார் துறைமுகத்தில் நடந்த விற்பனை தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட துணை கலெக்டர் (பேரிடர்) ஆதர்ஷ் கலந்துகொண்டு மணல் விற்பனையை தொடங்கி வைத்து கூறியது:காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு, முதன்முறையாக மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் பொதுப்பணித்துறை மூலம் உரிய சோதனை செய்யப்பட்டு விற்பனைக்காக இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த மணல் விற்பனை செய்யப்படும். புதுச்சேரிக்கு வழங்குவது குறித்து உரிய பரிசீலனைக்கு பிறகு முடிவு செய்யப்படும். மேலும் மாவட்ட வருவாய்த்துறை மூலம் அதிகாரிகள் உரிய பர்மிட் வழங்கி, எவ்வளவு மணல் ஏற்றுமதி செய்யப்படுகிறது, என்பது குறித்து பதிவு செய்யப்படும் என்றார்.நிகழ்ச்சியில் துறைமுக நிர்வாக பொறுப்பாளர் ராஜேஸ்வர ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: