தென்னை விவசாயிகளை வாழ வைக்கும் நீராபானம்

தேனி, ஆக.20: தேனி மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகளை தேனி உழவர்சந்தை’ பெருமளவில் வாழ வைத்து வருகிறது. இங்கு களைகட்டும் நீராபானம்’ விற்பனையால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் 32 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. ஆயிரம் தென்னை விவசாயிகள் ஒன்று சேர்ந்து ‛தேனி தென்னை உற்பத்தியாளர் கம்பெனி’ அமைத்துள்ளனர். இந்த கம்பெனி மூலம் மயிலாடும்பாறை, தேனி ஒன்றியங்களில் 2.5 லட்சம் தென்னை மரங்களில் நீராபானம் இறக்கப்படுகிறது. இறக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் இதனை விற்பனை செய்து விட வேண்டும். பதப்படுத்தி விற்பனை செய்யும் தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை. எனவே தேனி உழவர்சந்தையில் நேரடி விற்பனை மையம் தொடங்கினர். இங்கு 200 மி.லி., 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உழவர்சந்தைக்கு வருபவர்களில் பலரும் இதனை விரும்பி வாங்கி பருகுகின்றனர். வீட்டிற்கும் வாங்கிச் செல்கின்றனர். உழவர்சந்தைக்கு வரும் பொதுமக்கள் கொடுத்த ஆதரவு காரணமாக, மாவட்ட நீதிமன்றம், பெரியகுளம், கொடைக்கானல் ரோடு ஆகிய இடங்களிலும் விற்பனை மையம் தொடங்கி உள்ளனர்.

தென்னை உற்பத்தியாளர் கம்பெனியின் துணைத்தலைவர் கருப்பசாமி கூறுகையில், எங்களுக்கு பெரும் அளவில் ஊக்கம் கொடுத்தது தேனி உழவர்சந்தை தான். இங்கு கிடைத்த வரவேற்பே விவசாயிகளின் மனதில் நம்பிக்கை விதைத்தது. ஒரு மரத்தில் வருடத்திற்கு 12 தென்னை பாலைகள் வரும். இதில் ஆறு பாலைகளில் மட்டும் ‛நீராபானம்’ இறக்குவோம். அதுவும் 10 வயதுக்கு உட்பட்ட மரங்களில் மட்டுமே இந்த நீராபானம் இறக்க முடியும். தேங்காய், இளநீர் இறக்குவதை விட நீராபானம் இறக்கி விற்பனை செய்வது விவசாயிகளுக்கு ஐந்து மடங்கு கூடுதல் வருவாய் கொடுக்கிறது. எனவே இந்த விற்பனையினை அதிகரிக்கவும், சென்னை, மதுரை, திருச்சி உட்பட பெருநகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பவும் ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தவிர தென்னை சர்க்கரை தயாரிக்கவும் மடிவு செய்துள்ளோம் என்றார்.

Related Stories: