பள்ளிகளுக்கு வழங்கப்படும் அரசின் உதவி தொகையை நேரடியாக வழங்க வேண்டும் தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

வேதாரண்யம், ஆக.20: தமிழகத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் தொகையை தலைமையாசிரியரிடம் நேரடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற பொது செயலாளர் க.மீனாட்சி சுந்திரம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழக அரசு ஆண்டுத்தோறும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இன்றியமையாத பொருட்கள் மற்றும் விளையாட்டு கருவிகளை வாங்குவதற்கு பள்ளிக் கல்வித்துறை ஒரு குறிப்பிட்ட தொகையை சிறப்பு நிதியாக வழங்கி வந்தது. கொடுக்கப்பட்ட தொகையிலிருந்து பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி பயன்படுத்திக் கொண்டு உரிய கணக்குகளை பராமரிப்பது வழக்கமாகும்.கடந்த ஆண்டைபோல் இல்லாமல் இவ்வாண்டு பள்ளிக் கல்வித் துறை ஒரு வணிக நிறுவனத்திற்கு பொருட்களை வழங்கும் ஒப்பந்தத்தை தந்திருக்கிறது.

அந்த நிறுவனம் எந்த பள்ளிக்கு என்ன தேவையென கேட்டு அறியாமலே அறிவியல், ஆங்கிலம், கணிதம் விளையாட்டு ஆகியவைகளை கற்பிப்பதற்கான துணைக் கருவிகளில் அந்நிறுவனத்திடம் உள்ள ரூ.1500 மதிப்பிலான ஏதேனும் ஒரு பொருளை வட்டார வளமையத்தின் மூலம் பள்ளிக்களுக்கு வழங்கிவிட்டு ரூ.6 ஆயிரத்திற்கான ரசீதை தலைமையாசிரியர் பெயரில் தந்து அதற்குரிய தொகைக்கான வங்கி வரை ரசீது பெற்றுக் கொள்கிறது. எனவே பழைய முறையிலேயே நிதியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளாகிய செப்டம்பர் 5ம்தேதி மத்திய அரசு மாநில ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேசிய நல்லாசிரியர் விருதின் எண்ணிக்கையை நிர்ணயித்து வழங்கி வந்தது.

அந்த வகையில் ஆண்டு 2017 வரை தமிழ் நாட்டு ஆசிரியர்களில் 21 பேர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஆண்டு 2018ல் தமிழ் நாட்டுக்கு தேசிய நல்லாசிரியர் விருது ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. வேறு சில வடமாநிலங்களுக்கு 2 அல்லது 3 என்ற அளவில் விருதுகள் வழங்கப்பட்டன. அரசின் அனைத்துத்துறை முன்னேற்றத்திற்கும் அடிப்படை கல்வி வளர்ச்சியாகும். எனவே மக்களுக்கு கல்வியை புகட்டுகின்ற ஆசிரியர்களை எந்த அளவுக்கு அரசு ஊக்குவிக்கிறதோ அந்த அளவுக்கு கல்விவளமும் செழிக்கும் என அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: