சுதந்திர தினவிழாவையொட்டி தஞ்சை ரயில் நிலையத்தில் டிஐஜி அருள்ஜோதி ஆய்வு

தஞ்சை, ஆக. 14: நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த கண்காணிப்பில் உள்ளது. மேலும் ஜம்மு காஷமீரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தஞ்சை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு குறித்து சென்னை ரயில்வே பாதுகாப்பு படை டிஐஜியும், முதன்மை பாதுகாப்பு ஆணையருமான அருள்ஜோதி ஆய்வு செய்தார். அப்போது ரயில் நிலையங்களில் அசம்பாவித சம்பவங்களில் இருந்து ரயில் பயணிகளை எவ்வாறு பாதுகாப்பது, ரயில் நிலையம் மற்றும் ஓடும் ரயிலில் வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, தண்டவாளங்களில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னை குறித்து போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

இதையடுத்து ரயில்வே நடைமேடை, டிக்கெட் கொடுக்கும் இடத்தை ஆய்வு செய்தார். அப்போது ரயில்வே ஊழியர்களால் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்திருந்தால் அகற்ற வேண்டும். ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர மற்ற இடங்களில் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் தண்டவாளம், ரயில் நிலைய பொருட்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக தனியாக கிரைம் பிரிவு ஒன்றை உருவாக்கி எவ்வாறு செயல்பட வேண்டுமென போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். இதைதொடர்ந்து தஞ்சை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

Related Stories: