அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை திருப்புவனம் சந்தைக்கு வருவோரை மிரட்டும் மாடுகள்

திருப்புவனம், ஜூலை 24: திருப்புவனம் வாரச்சந்தையில் திரியும் மாடுகளால் மக்கள் அச்சமடைந்து ஓடுகின்றனர்.

திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு திருப்புவனம் சுற்றியுள்ள கிராம மக்கள் கோழிகள், ஆடுகளை விற்பனை செய்வதும் விலைக்கு வாங்கிச் செல்வதும் வழக்கம். சிறு வியாபாரிகள் மதுரை மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கி வந்து சந்தையில் கடை வைத்து விற்பனை செய்வார்கள். சிறு குறு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளையும் கத்தரி, மிளகாய், தக்காளி, வெண்டை, தேங்காய், கீரை வகைகள் போன்றவற்றை சந்தையில் விற்பனை செய்வதும் வழக்கம்.திருப்புவனத்தை சுற்றியுள்ள 173 கிராமங்களுக்கு இந்த சந்தையே பிரதானமாக உள்ளதால் காலையிலிருந்து மாலை 6 மணிவரை இயங்கும். ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் சந்தைக்கு வருவதும் போவதுமாக பரபரப்பாகவே இருக்கும். இந்நிலையில் சாலையில் திரியும் மாடுகள் சந்தைக்குள் புகுந்து ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு ஓடுவதும் பொதுமக்கள் சிதறி ஓடுவதும் நடக்கிறது. இதனால் பலமுறை விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. எனவே பெண்கள் அச்சத்துடன் தான் சந்தைக்கு வருகின்றனர். திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகமும் போலீசாரும் இணைந்து சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திருப்புவனம் வாரச்சந்தையில் பெரிய கோவிலுக்கு செல்லும் பாதையை மறித்து கடை விரித்துள்ள வியாபாரிகளால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. சாலையில் திரியும் மாடுகள் சந்தைக்குள் புகுந்து ஓடுவதால் பொது மக்களும் பெண்களும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே கடைகளை ஒதுக்கப்புறமாக போடவும், மாடுகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: