மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆய்வு கூட்டத்தில் அதிகாரி அறிவுறுத்தல்

திருவாரூர், ஜூலை 24: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை ஏற்படுத்திட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மணிவாசன் தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டத்தில் அரசு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மணிவாசன் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆனந்த், டிஆர்ஓ பொன்னம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் தெய்வநாயகி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் மணிவாசன் பேசுகையில், வேளாண் துறையின் மூலம் மாவட்டத்தில் பிரதம மந்திரி சம்மான் திட்டத்தில் விவசாயிகளை பயனாளிகளாக சேர்ப்பதற்கு வேளாண் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் அதிக அளவில் பண்ணை குட்டைகளை அமைப்பதற்கு வேளாண் பொறியியல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டத்தில் கால்நடைகள் வளர்ப்பு குறித்து கால்நடை துறையினர் அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும், இதேபோல் சுகாதாரத்துறையினர் தங்களது துறை மூலம் வழங்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் வரும் மழைக் காலத்தை கருத்தில்கொண்டு விஷக்கடி மருந்துகள் உள்ளிட்ட அனைத்து மருந்துகளையும் இருப்பு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதேபோல் பள்ளி செல்லா குழந்தைகள் தொடர்ந்து பள்ளி செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறையினர் எடுக்க வேண்டும், மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் நீர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு மணிவாசன் தெரிவித்துள்ளார்.

Related Stories: