கூடுவாஞ்சேரி அருகே ஆதனூரில் பரபரப்பு திமுக மகளிர் அணி நிர்வாகி மீது சரமாரி தாக்குதல்: தாலி சரடை பறித்து சென்றதாகவும் புகார்

கூடுவாஞ்சேரி, ஜூன் 18: சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்தியதை தட்டிக்கேட்டதால் கூடுவாஞ்சேரி திமுக மகளிரணி அமைப்பாளர் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தியது குறித்தும்  10 சவரன் தாலி சரடு பறித்து சென்றதாகவும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், கூடுவாஞ்சேரி அருகே நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஜவகர் ஐயா நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி விஜயா (46), மகன்கள் தினேஷ் (28), பார்த்தீபன் (26) ஆகியோர் உள்ளனர். இதில், விஜயா ஆதனூர் ஊராட்சியில் திமுக மகளிரணி அமைப்பாளராக உள்ளார். பார்த்திபன், வேலைக்கு சென்றுவிட்டு இரவு அவரது அம்மா விஜயாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கூடுவாஞ்சேரியிலிருந்து காரில் வந்துள்ளார். அப்போது, வீட்டின் அருகே வந்தபோது சாலை வளைவின் குறுக்கே பக்கத்து தெருவை சேர்ந்த சூர்யா, இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெகு நேரமாக காருக்கு வழிவிடாமல் தகராறு செய்துள்ளார்.

இதனை, பார்த்தீபன் தட்டி கேட்டபோது, சூர்யா தாக்கி உள்ளார். மேலும், ஆத்திரமடைந்த சூர்யா, அவரது அம்மா மீனாட்சி, அவரது சகோதரர் கார்த்திக் ஆகியோர் ஓடிவந்து பார்த்தீபன், விஜயாவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில், பார்த்தீபன் கை முறிந்தது. விஜயாவுக்கு கன்னம், கழுத்து, தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில், விஜயா ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த நேரத்தை பயன்படுத்தி அவரது காதை அறுத்து கழுத்திலிருந்த 10 சவரன் தாலி சரடை பறித்துகொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதனை கண்டதும், பொதுமக்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இதில், விஜயா உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இச்சம்பவம் குறித்து, பர்த்தீபன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் கொடுத்துள்ளார். கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, 3 பேரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால், கூடுவாஞ்சேரி அருகே ஆதனூரில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: