கன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் தென் தமிழக கடல் பகுதியில் 3.8 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு கடல் தகவல் மையம் எச்சரிக்கை

நாகர்கோவில், ஜூலை 18:  தென் தமிழக கடல் பகுதியில் 3.8 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை. நேற்றும் வறண்ட வானிலை காணப்பட்டதுடன் வெயிலும் கொளுத்தியது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 5 அடியாக சரிந்திருந்தது. அணைக்கு 384 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 488 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 39.45 அடியாக இருந்தது. அணைக்கு 215 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 320 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

மாவட்டத்தில் மேற்கு கடற்கரை பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அழிக்கால் பகுதிகளில் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையே தென் தமிழக பகுதியில் மீண்டும் பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் 3.5 மீட்டர் முதல் 3.8 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது.இன்றும் (18ம் தேதி) பேரலைகளின் தாக்கம் காணப்படும். மேலும் தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் கன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசும். 18ம் தேதி மேற்கு திசையில் இருந்து கேரள கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: