15ம் நாள் உற்சவத்தில் பச்சை நிறப் பட்டாடையில் காட்சி தந்தார் அத்தி வரதர்

* தரிசன நேரம் குறைப்பு  

* பக்தர்கள் அதிருப்தி

காஞ்சிபுரம், ஜூலை 16: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1 ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஆகஸ்ட் 17 ம் தேதிவரை 48 நாட்கள் நடைபெற்று வருகிறது. அத்தி வரதர் முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்த வைபவம் தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் ஆர்வத்துடன் அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பக்தர்கள் சிரமமின்றி அத்தி வரதரை தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 15 நாட்களில் 18 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 13 ம் நாளான ஜூலை 13 ம் தேதி சனிக்கிழமை சுமார் 2.5 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துவிட்டுச் சென்றனர்.

நேற்று காலை இசையமைப்பாளர் இளையராஜா வரதராஜ பெருமாள் மேற்கு கோபுரம் வழியாக வந்து முக்கிய பிரமுகர்களுக்கான தனி வழியில் சென்று அத்தி வரதரை தரிசனம் செய்தார். மேலும் இரவு 10.30 மணிவரை கிழக்கு கோபுர வாயில் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இரவு 11 மணிவரை அத்தி வரதரை தரிசனம் செய்யலாம் என்ற நடைமுறை மாற்றப்பட்டு புதிதாக இரவு 9 மணிவரை மட்டுமே தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பக்தர்கள் வருகை அதிகரிப்பால் தரிசன நேரம் அதிகரிக்கப்பட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தரிசன நேரம் இரவு 9 மணியாக குறைக்கப்பட்டிருப்பது உள்ளூர் பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: