மார்த்தாண்டம் அருகே பரபரப்பு ரயிலில் அடிபட்டு 3 மணி நேரம் தண்டவாளத்தில் கிடந்த சடலம் கவ்வி இழுக்க முயன்ற நாய்களை துரத்தியடித்த பொதுமக்கள்

மார்த்தாண்டம், ஜூலை 16: கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக கொல்லம் செல்லும் மெமு ரயில் நேற்று மாலை 5.30 மணியளவில் மார்த்தாண்டம் அருகே குழித்துறை ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. 2வது பிளாட்பாரத்தில் வந்த போது தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்தார்.இதையடுத்து லோகோ பைலட் குழித்துறை ரயில் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். சம்பவத்தை தொடர்ந்து சற்று நேரம் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இறந்தவர் லுங்கி மற்றும் சட்டை அணிந்திருந்தார். நீண்ட நேரமாக ரயில்வே போலீசார் சம்பவ இடம் வராததால் சடலம் அங்கேயே அனாதையாக கிடந்தது. ரத்த வாடையால் அங்கு திரண்டு வந்த நாய்கள் சடலத்தை கவ்வி இழுக்க முயன்றன. இதை கண்ட பொதுமக்கள் நாய்களை துரத்தியடித்துவிட்டு, போலீசார் வரும்வரை அங்கேயே நின்றுக் கொண்டு சடலத்தை பாதுகாத்தனர்.இதனிடையே 2வது பிளாட்பாரத்தில் வாலிபர் சடலம் கிடந்ததால் குழித்துறை ரயில் நிலையம் வந்த ரயில்கள் அனைத்தும் 1வது பிளாட்பாரம் வழியாக புறப்பட்டு சென்றன. இந்நிலையில் சுமார் 3 மணி நேரம் தாமதமாக இரவு 8.45 மணியளவில் ரயில்வே போலீசார் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பிறகு ரயில்கள் வழக்கமான தடங்களில் இயங்கின.

Related Stories: