நாகர்கோவிலில் மீண்டும் தலைதூக்கும் சுவரொட்டிகள் கண்டு கொள்ளாத மாநகராட்சி

நாகர்கோவில், ஜூலை 16: நாகர்கோவில் மாநகராட்சியில் மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. நாகர்கோவில் மாநகராட்சியின் அடையாள சின்னமான மணிமேடை முதல், அனைத்து முக்கிய சந்திப்புகள் மற்றும் சாலைகளில் அரசு மற்றும் தனியார் சுவர்களில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்தன. இதுபோல் மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் மற்றும் மரங்களில் ஆணி அடித்து விளம்பர பதாகைகள் தொங்க விடப்பட்டு வருகின்றன.  இன்டாக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் இதுபற்றி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக புகார் மனுக்கள் அனுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், அரசு சுவர்களில் விளம்பரங்கள் செய்ய தடை விதித்ததுடன், தனியார் சுவர்களிலும், அவர்களின் அனுமதி பெற்றே விளம்பரம் செய்ய வேண்டும் என அறிவித்தார்.

மேலும் அச்சகங்களிலும் சோதனை நடத்தி எச்சரிக்கை விடுத்தார். அரசு சுவர்கள், பாலங்களில் ஒட்டப்பட்ட விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. நகரில் பிளெக்ஸ் போர்டுகள் வைக்கவும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மாநகரை படிப்படியாக அலங்காரமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையர் அறிவித்திருந்தார்.  இந்நிலையில், நாகர்கோவில் நகரில் மீண்டும், ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.  அரசு சுவர்கள் மட்டுமின்றி வழிகாட்டி மற்றும் தெரு பெயர் லகைகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதனால் மீண்டும் அரசு சுவர்கள் விளம்பரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே மாநகராட்சி நிர்வாகம் காவல் துறை உதவியுடன் மீண்டும், இதுபோன்று அரசு சுவர்கள், மின்கம்பங்கள், போக்குவரத்து அறிவிப்பு பலகைகள், மரங்களில் விளம்பரம் ெசய்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, சுவரொட்டிகள் ஒட்டுவதை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிரட்டி பணம் பறிக்க நூதன முறை?

நாகர்கோவிலில் சில அமைப்புகள், அதிகாரிகளை மிரட்டி பணம் பறிப்பது, போராட்டம் நடத்துவது, வால்போஸ்டர் அடித்து அவர்களது பெயரை இழிவுபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது.  தவறு செய்த அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நேர்மையான அல்லது தவறே செய்யாத அதிகாரிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இதனால் சில நேரம் உண்மையிலேயே தவறு செய்த அதிகாரிகள் மீது புகார்கள் எழுந்தாலும், அவை கண்டு கொள்ளப்படுவதில்லை.  

தவறு செய்த ஊழியர்கள் அல்லது அதிகாரிகள் தங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஜாதி மத சாயம் பூசி ஒரு சில கட்ட பஞ்சாயத்து  அமைப்புகள் உயர் அதிகாரிகளுக்கு மனஉளைச்சல் மற்றும் மிரட்டவும், இதுபோன்ற சுவரொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பல லட்சங்கள் சம்பந்தப்பட்டர்களிடமிருந்து வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மாநகராட்சி தடையால், சுவரொட்டி ஒட்டி, தனிப்பட்ட நபர்களை களங்கப்படுத்துவது குறைந்திருந்தது. மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன், இதுபோன்ற தனிநபர்களை களங்கப்படுத்தி மனதளவில் ஆறாத ரணத்தை உண்டுபண்ணும் சுவரொட்டிகளும் நகர சுவர்களில் வலம் வருகின்றன.

Related Stories: