துடியலூர் விருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

துடியலூர்,ஜூலை12: துடியலூர் அடுத்துள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது.கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை  விருந்தீஸ்வரர் கோயில் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக பணிகளுக்காக சீரமைக்கப்பட்டது. சிதிலமடைந்திருந்த கன்னிமூல கணபதி, விருந்தீஸ்வரர், விஸ்வநாயகி அம்மாள், சுப்ரமண்யர், லக்ஷ்மிநாராயண பெருமாள்,சண்டிகேஸ்வரர்,சூரியன்,சந்திரன், நவநாயகர்கள், சனிஸ்வரன்,ஆஞ்சநேயர்,அதிகார நந்தி,உற்சவ மூர்த்திகள்,காலபைரவர் பரிவாச சன்னதிகளுக்கும், பரிவார விமானங்களுக்கும் சிற்ப சாஸ்திர முறைப்படி புனரமைக்கும் பணியும், வண்ணம் பூசும் பணியும்  நடைபெற்றது.

 கோயில் கர்ப்பகிரகம் மற்றும் நடராஜர் மண்டபத்தின் உள்பகுதியில் தங்கம் மூலாம் பூசப்பட்ட தகடுகள் பதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 7ம்  தேதி காலை 9 மணிக்கு கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபரசுவாமிகள், பிள்ளையார் பீடம் பொன்.மாணிக்கவாசக சுவாமிகள் முன்னிலையில் நேற்று காலை 9 மணியளவில் யாக பூஜைகளில் இருந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து மூல மூர்த்திகளுக்கு அலங்கார பூஜை மற்றும் அபிஷேகப் பூஜைகள் ஆகியவை நடைபெற்றது. மாலை திருக்கல்யாண உற்சவம், திருவீதியுலா ஆகியன நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன்,இந்து முன்னணி நிர்வாகிகள்  பாலன்தியாகராஜன், ஜெய்கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் பி.வி.மணி, செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியன், அன்னதானக்குழு தலைவர் தம்புராஜ், விழா ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜ் மற்றும் சங்கர், சண்முகம், கோவிந்தராஜ், தொழில் அதிபர்கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: