மதுரை மாநகராட்சியில் எல்இடி பல்பு மாற்றும் திட்டத்தில் 28 புதிய வார்டுகள் புறக்கணிப்பு..?

மதுரை, ஜூலை 11: எல்இடி பல்புகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் புதிய 28 வார்டுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.மதுரை மாநகராட்சி பழைய 72 வார்டுகளுடன் கூடுதலாக 28 வார்டுகளை சேர்த்து 100 எண்ணிக்கை கொண்ட வார்டுகளாக மாற்றப்பட்டது. இதன் மூலம் 147.997 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கப்பட்டது. அத்துடன் ஒரு சதுர கி.மீ பரப்பளவிற்கு 364 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சாலைகளின் நீளம் 1572.53 கி.மீ.,ஆக உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு மின்விளக்கும் சராசரியாக 30 மீ இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு திட்டமானாலும் சரி 100 வார்டுகளுக்கும் பகிர்ந்து செய்யப்படுவதில்லை. மாறாக பழைய 72 வார்டுகளுக்கு மட்டுமே எந்த ஒரு புதிய திட்டமானாலும் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக பாதாள சாக்கடை, குடிநீர் வசதிகள் என்றாலே பழைய 72 வார்டுகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் பாதாள சாக்கடை திட்டம் பழைய 72 வார்டுகளுக்கே செய்யப்பட்டது. இன்றுவரை குடிநீர் வசதிகள் புதிய 28 வார்டுகளுக்கு செய்யப்படவில்லை. பொதுவாகவே மத்திய அரசு தரும் நிதியை வைத்து தான் மாநகராட்சி இயங்குகிறது. புதிய 28 வார்டுகள் குறித்த விபரங்களை மத்திய அரசுக்கு மாநகராட்சி அனுப்பியுள்ளதா என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஏனெனில் எந்த ஒரு நிதியை மத்திய அரசு தந்தாலும், அதனை பழைய 72 வார்டுகளுக்கு மட்டுமே மாநகராட்சி செலவிடுகிறது. இந்நிலையில் குழல், சோடியம் ஆவி, சிஎப்எல் உள்ளிட்ட விளக்குகளை எல்இடி பல்புகளாக மதுரை மாநகராட்சி மாற்றி வருகிறது. இதுவரை சுமார் 18 ஆயிரம் விளக்குகள் எல்இடியாக மாற்றி விட்டனர். மேலும் புதிய எல்இடி விளக்குகள் மாற்றப்பட்டு வருகிறது. இதிலும் புதிய 28 வார்டுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: