கோவை மாநகராட்சியில் எல்இடி விளக்குகள் மாற்றும் பணி தீவிரம்

கோவை, ஜூன் 27:கோவை மாநகராட்சி சார்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகர் பகுதியில் உள்ள தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  கோவை மாநகர் பகுதிகளில் சுமார் 68 ஆயிரம் தெரு விளக்குகள் உள்ளன. இவற்றில் 90 சதவீதம் விளக்குகள் சோடியம் விளக்குகளாகும். தெரு விளக்குகளை பராமரித்து அதற்கு மின் கட்டணத்தை கோவை மாநகராட்சி செலுத்தி வருகிறது. ஆண்டுக்கு ரூ.3 கோடி வரை மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது.  இந்த செலவை குறைக்க கோவை மாநகராட்சியால் உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் தினமும் ஒரு மெகவாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் சூரிய ஒளி தகடுகள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது எதிர்பார்த்த அளவு ஒரு மெகாவாட் மின்சாரம் அதில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரத்தை பயண்படுத்தும் விதமாக தெரு விளக்குகளில் உள்ள சோடியம் விளக்குகள் அகற்றப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன.  இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் பணிகள் மே மாதம் இறுதியில் துவங்கப்பட்டு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரிரு மாதங்களில் இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெறும், ’’ என்றார்.

Related Stories: