கம்பம் வனச்சரகத்தில் வறட்சி வன விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டி தேவை: உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கம்பம், ஜூன் 25: கம்பம் வனச்சரகத்தில் வனவிலங்குகளுக்கு காடுகளை ஒட்டி தண்ணீர்தொட்டிகள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்பம் மற்றும் மேகமலை வன உயிரின சரணாலய கட்டுப்பாட்டில் சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, ஆங்கூர்பாளையம், கம்பம்மெட்டு, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கம்பம்  மலையடிவாரத்தை ஒட்டிய வனப்பகுதிகளில் அதிக அளவில் காட்டுபன்றிகள், யானைகள், மான்கள் உள்ளிட்ட அரியவகை உயிரினங்கள்  வாழ்கின்றன. இங்குள்ள  அடர்ந்த  வனப்பகுதிகளை ஒட்டி உள்ள அடர்ந்த காடுகள் காட்டுபன்றிகளுக்கு தேவையான உணவுகளை அதிகம் தருகிறது. கம்பம், கூடலூர் மலையடிவாரத்தை ஒட்டி விவசாயிகள் அதிக அளவில் எள், தக்காளி, அவரை, உள்ளிட்ட மானாவரி பயிர்களை விதைக்கின்றனர்.  தென்மேற்குபருவ மழை இல்லை. இதனால் மானாவாரி பயிர்களும் விதைக்கப்பட்டு கருகிவிட்டன.

மழைஇல்லாத நிலையில் வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகள் பசியுடன் அலைகின்றன. வனப்பகுதிகளில் இருந்து தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் காட்டுபன்றிகள் தோட்ட நிலங்களுக்கு வருகின்றன. குறிப்பாக கம்பம்மெட்டு மலையடிவாரத்தை ஒட்டி அதிக அளவில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக படையெடுக்கின்றன. தண்ணீர் கூட காடுகளில் இல்லாத நிலையில் அலையக்கூடிய காட்டுப்பன்றிகளால் தோட்டங்களில் மோட்டார் ஓடும் இடங்களில் தண்ணீரை குடித்துவிட்டு வாழைதோட்டங்கள், காய்கறி தோட்டங்களிலேயே தங்கி விடுகின்றன.  எனவே, இதனை பாதுகாத்திட தேவையான நடவடிக்கையை தேனிமாவட்ட வனத்துறை அதிகாரிகள் எடுக்கவேண்டும்.

குறிப்பாக மழை இல்லாத காலங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் தண்ணீர்தொட்டிகளை கட்டித்தர வனத்துறையினர் முன்வரவேண்டும். இதுகுறித்து வன உயிரின ஆர்வலர்கள்  கூறுகையில்,`` மழை இல்லாத நிலையில் காடுகளில் கடுமையான பாதிப்புகள் உள்ளன. மரங்கள், இலைகள் கருகிவிட்டன. தண்ணீர் ஊற்றுக்கள் இல்லாத நிலையில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் கட்டப்படவேண்டும். மேலும் விலங்குகள்  வேட்டையாடுதலை தடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: