குடிநீர் பிரச்னையால் 2 மாதமாக பரிதவிப்பு காலி குடங்களுடன் மனு அளிக்க வந்த பெண்கள் திருவண்ணாமலை குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை, ஜூன் 25: குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி பெண்கள் காலி குடங்களுடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் ேக.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வின்சென்ட் ராஜசேகர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வறட்சி நிவாரணம், சுய தொழில் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்தனர்.

கடந்த மார்ச் 10ம் தேதிக்கு பிறகு தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு இரண்டு வாரம் மட்டுமே குறைதீர்வு கூட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து, ஜமாபந்தி காரணமாக மீண்டும் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், மீண்டும் நேற்றுதான் குறைதீர்வு கூட்டம் நடந்தது. இதனால், வழக்கத்தைவிட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என நூற்றுக்கணக்கானோர் பல மணி நேரம் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து கோரிக்கை மனு அளித்தனர். மேலும், மனு விபரங்களை கணினியில் பதிவு செய்ய 4 ஊழியர்கள் மட்டுமே ஈடுபட்டனர். அதனால், மணி கணக்கில் காத்திருந்த பொதுமக்கள் வேதனை அடைந்தனர். மேலும், கூட்ட நெரிசல் காரணமாக கணினி பதிவு அறையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில், செங்கம் தாலுகா, பனைஓலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் மனு அளிக்க வந்தனர். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், குடங்களுடன் மனு அளிக்க அனுமதி மறுத்தனர். அதைத்தொடர்ந்து, குடங்களை வெளியே வைத்துவிட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘பனைஓலைப்பாடி கிராமத்தில் உள்ள 6 போர்வெல்களும் பழுதடைந்து விட்டது. பொது கிணற்றை சீரமைக்காததால் அதை பயன்படுத்த முடியவில்லை. இதனால் 2 மாதங்களாக குடிநீருக்காக அலைகிேறாம். ஊராட்சி செயலாளரிடம் பலமுறை தெரிவித்தும் அவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், குடிநீர் பிரச்னை தீர்க்காமல் தரக்குறைவாக பேசுவதாகவும் தெரிவித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் வழக்கத்தைவிட பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால், காலை 11 மணிக்கு தொடங்கி, பகல் 2 மணி வரை குறைதீர்வு கூட்டம் நீடித்தது. மேலும், தீக்குளித்தல் போன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: