திருச்செங்கோடு அருகே போலி காசோலை கொடுத்து மூதாட்டியிடம் ₹2800 மோசடி

திருச்செங்கோடு, ஜூன் 21:  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா எலச்சிப்பாளையத்தில் வசித்து வருபவர் பழனியம்மாள்(63). கணவனை இழந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் மூலம், ஓய்வூதியம் பெறுவதற்கு நாமக்கல் தொழிலாளர் துறை அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், நேற்று மாலை சுமார் 5 மணியளவில், டிப்-டாப் உடையணிந்த ஒருவர், எலச்சிபாளையம் பகுதிக்கு டூவீலரில் வந்துள்ளார்.

நேராக பழனியம்மாளிடம் சென்று “உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா” என விசாரித்து விட்டு, உங்களுக்கு பணம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  அதனை நம்பிய அவரிடம், உதவித்தொகைக்கான வங்கி காசோலையை கொடுத்துள்ளார். இதனை கொண்டு சென்று நீங்கள் ரேஷன் பொருள் வாங்கும் எலச்சிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கொடுத்தால், ₹6 ஆயிரம் கிடைக்கும் என கூறியுள்ளார். அதற்கு கட்டணமாக ₹2800ஐ ரொக்கமாக பழனியம்மாளிடம் பெற்றுக்கொண்டு அங்கிருந்து நடையை கட்டினார்.

இதையடுத்து, காசோலையை எடுத்துக்கொண்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு ஓட்டமும்-நடையுமாக சென்ற பழனியம்மாள், உதவித்தொகை வழங்குமாறு கேட்டுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் காசேலையை ஆராய்ந்து பார்த்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பழனியம்மாள், சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சுரேஷிடம் முறையிட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், எலச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: