மதுரை, ஜூன் 21: மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மொத்தம் 21 இயக்குநர் பதவி உள்ளது. இப்பதவிக்கு மதுரை, தேனி உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் 44 கிளைகளுக்கு கீழ் இயங்கும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி, மற்றும் அரசு அலுவலக பணியாளர் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு வங்கியில் தேர்வான தலைவர்கள் போட்டியிடலாம். இந்த இயக்குநர் பதவிகள் பல்வேறு ஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கப்படும். இந்த வங்கியின் 21 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடந்தது. தேர்தல் அதிகாரியாக சதிஷ்குமார் இருந்தார். காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்பு மனு பெறப்பட வேண்டும். ஆனால், மாவட்டத்தில் பல்வேறு கூட்டுறவு வங்கியின் தலைவர்களான அதிமுகவினர் மட்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இவர்கள் மதியம் 2 மணிக்குள் மனு தாக்கல் செய்து முடித்தனர். தேர்தல் அதிகாரி 2 மணிக்கு மேல் வெளியே சென்றுவிட்டார். அரசு பணியாளர் கூட்டுறவு சங்கத்திற்கான ஒரு இயக்குநர் பதவிக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்ய வணிகவரித் துறை சிக்கண நாணயச் சங்கத் தலைவர் சித்திரை வந்தார். தேர்தல் அதிகாரி வெளியே சென்று விட்டார். தேவையானால், இணைப்பதிவாளர். துணை பதிவாளரிடம் மனு தாக்கல் செய்யுங்கள் என கூறி அவரை அலைக்கழித்தனர். மேலும், வேட்பு மனு தாக்கல் நடந்த மாடியில் அதிமுகவினர் சுற்றி உட்கார்ந்து கொண்டு வேறு யாரையும் மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்தனர். 2 மணி நேரத்திற்கு மேல் சித்திரை மனு தாக்கல் செய்யா முடியாமல் தவித்ததால், இதுதொடர்பாக அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்டத் தலைவர் ஜெயராஜ ராஜேஸ்வரன், மாவட்டச் செயலாளர் .நீதிராஜா, மாவட்ட நிர்வாகி பாலாஜி உட்பட ஏராளமானோர் திரண்டு தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.