இரிடியம் தருவதாக கூறி பணம் மோசடி குமரியில் கைதானவர்கள் மேலும் பலரிடம் கைவரிசை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

நாகர்கோவில், ஜூன் 19:  கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் பகுதிகளில் ஒரு கும்பல் இரிடியம் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர்ராய், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சாம்சன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணையில் இறங்கினர்.  இதில் கடைசியாக கன்னியாகுமரி சுவாமிநாதபுரத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் அரவிந்த் (30) என்பவர் பணம் கொடுத்து ஏமாந்து இருந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், இந்த மோசடியில் ஈடுபட்டதாக சுசீந்திரம் அருகே உள்ள மணிக்கட்டி பொட்டல் சீயோன்புரம் பகுதியை சேர்ந்த ஜாண் ஆல்வின் பிரபு என்ற கள்ளன் பிரபு, கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற சதீஷ் (39), தேனி மாவட்டம் குமுளி வண்டி பெரியார் பகுதியை சேர்ந்த நாகராஜன் (42) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கைதானவர்களில் ஜாண் ஆல்வின் பிரபு மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. இவர் போலீஸ் ரவுடி பட்டியலிலும் இருந்து வந்துள்ளார். குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, சென்னையிலும் இவர்கள் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. மோசடி பணத்தில் ஜாண் ஆல்வின் பிரபு பிரமாண்டமாக வீடு கட்டி உள்ளார். காரும் வாங்கி இருக்கிறார். இவர் காதல் திருமணம் செய்தவர் ஆவார். இந்த சம்பவத்தின் மூளையாக செயல்பட்டு, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பேசி உள்ளார்.  அதிகளவில் பணம் வைத்து பூஜை காரியங்களில் நம்பிக்கை உள்ளவர்களை நோட்டமிட்டு, அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசி பணத்தை வாங்கி உள்ளனர். வெறும் பித்தளை கலசம், செம்பு கலசங்களை காட்டியும், புகைப்படங்களை காட்டியும் நம்ப வைத்துள்ளனர். ரூ.40 லட்சம் வரை இவர்கள் மோசடி செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறி உள்ளனர். எனவே அதிகளவில் புகார்கள் வரும் என்பதால், தேவைப்படும் பட்சத்தில் கைதாகி உள்ள நபர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: