நெடுஞ்சாலையில் பட்டுப்போன மரத்தை அகற்ற வலியுறுத்தல்

இடைப்பாடி, ஜூன் 18:  இடைப்பாடி அருகே மூலப்பாதை-கல்வடங்கம் நெடுஞ்சாலையில் பட்டுபோய் விழும் நிலையில் உள்ள புளியமரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இடைப்பாடி அடுத்த அரசிராமணி பேரூராட்சியில், மூலப்பாதையில் இருந்து கல்வடங்கம் செல்லும் நெடுஞ்சாலையில், சாலையோரம் இருபுறமும் புளியமரங்கள் அதிக உள்ளன. நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆண்டுதோறும் குத்தகைக்கு விடப்பட்டு மரத்தில் இருந்து புளி பறிக்கப்பட்டு விற்பனை செய்வதால் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், மூலப்பாதை நெடுஞ்சாலையில் உள்ள புளியமரம், அடிப்பகுதியில் செல்லரித்து, எப்போது வேண்டுமானாலும் விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மரத்தை அகற்றக்கேரி, பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில வாரங்களாக கோடை மழையின் போது சூறாவளி காற்று வீசுகிறது. அப்போது, புளியமரம் முறிந்து விழுமோ என்ற அச்சத்தில் மக்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், பஸ்கள் அதிகளவில் செல்கிறது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் பட்டுப்போன புளியமரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: