காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சர்வர் கோளாறால் ஆதார் அட்டை மையங்கள் மூடல்: ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் மக்கள்

திருப்போரூர், ஜூன் 18: தமிழகம் முழுவதும் அந்தந்த வட்டாட்சியர்  அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்படுகிறது. இதற்காக தனியார்  நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டு, அதன் அடிப்படையில்  பணியாளர்களை நியமித்துள்ளது. இந்த பணியாளர்களுக்கு தனி பயனர் குறியீடு,  கடவு சொல் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.இதனை பயன்படுத்தி அந்தந்த  மையங்களில் புதிய ஆதார் அட்டை பதிவு செய்தல், பெயர் மாற்றம்,  பிறந்த தேதி, முகவரி மாற்றம் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.  இந்தியாவிலேயே தமிழகத்தில் 80 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை  வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பலரும் வாடகை வீடுகளில் வசிப்பதால் அடிக்கடி, வேறு வீட்டுக்கு குடியேறும்போது வங்கி பயன்பாடு, பள்ளி, கல்லூரி சேர்க்கை, எரிவாயு  இணைப்பு முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காக ஆதார் அட்டையிலும் முகவரி மாற்றம்  செய்கின்றனர்.அதேபோல் பாஸ்போர்ட், வருமான வரி பான்கார்டு ஆகியவற்றை  பெறும்போது பிறந்த தேதி, பெயர், தந்தை பெயர் ஆகியவற்றில் சிறிய மாற்றம்  இருந்தாலும் ஆதார் அட்டையிலும் அவற்றை திருத்த வேண்டிய கட்டாயம்  ஏற்படுகிறது. ஆகவே, புதிய ஆதார் அட்டை பெறுபவர்களுக்கு இணையாக, அவற்றில்  திருத்தம் செய்வதற்காகவே தினமும் ஏராளமானோர் வட்டாட்சியர் அலுவலகத்தில்  உள்ள ஆதார் மையங்களுக்கு படையெடுக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு  வாரமாக ஒப்பந்த அடிப்படையில் உள்ள ஆதார் சேவை மையத்தில் பணியாற்றும்  ஊழியர்களின் தனி பயனர் குறியீடு, கடவுச்சொல் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது.  இதுபற்றி தங்களது நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, மறு உத்தரவு வரும் வரை  ஆதார் மையங்களை மூடி வைக்குமாறு அவர்கள், கூறியதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலக ஆதார் சேவை  மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன்  திரும்பி செல்கின்றனர். சில மையங்களில் சர்வர் கோளாறு காரணமாக 17ம் தேதி  வரை ஆதார் மையம் செயல்படாது என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

Related Stories: